Ad Banner
Ad Banner
 பொது

தேர்தல் காலத்தில் நெறிமுறை & பொறுப்புடன் செயல்பட சமூக ஊடக பயனர்களுக்கு அறிவுறுத்து

15/11/2025 05:33 PM

கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள் உள்ளடக்கத்தைப் பகிரும்போது, ​​குறிப்பாக தேர்தல் காலத்தில் நெறிமுறை மற்றும் பொறுப்புடன் செயல்படுமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி அறிவுறுத்துகிறது.

அரசியல் தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாகும்.

ஆனால், அவை பணிவாக, விவேகமாக மற்றும் சட்டத்தை மீறாமலும் இருக்க வேண்டும் என்று எம்.சி.எம்.சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலக்கவியல் தளங்கள் உண்மையான மற்றும் ஆக்கபூர்வமான தகவல்களைப் பரப்புவதற்கான இடமாக இருக்க வேண்டும்.

மாறாக, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மையைப் பாதிக்கும் அளவிற்கு எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக வெறுப்பு, அவதூறு அல்லது அவமானங்களை விதைக்கும் இடங்களாக இருக்கக்கூடாது என்று எம்.சி.எம்.சி கூறியுள்ளது.

1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சட்டம் 588, செக்‌ஷன் 233-இன் கீழ், அவதூறு, 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பத்தை அவமதிப்பது, ஆபாசமான, போலியான, அச்சுறுத்தும் அல்லது மிகவும் புண்படுத்தும் உள்ளடக்கத்தைப் பரப்பும் இணைய வசதிகள் அல்லது செயலி சேவைகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக MCMC தெரிவித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)