கோலாலம்பூர், 05 ஜூலை (பெர்னாமா) -- அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 58-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், AMM 58 மற்றும் தொடர்புடைய கூட்டங்களை முன்னிட்டு ஆயத்தப் பணிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டம், எஸ்.ஓ.எம்-மின் வரைவு செயற்குழு இன்று கூடியது.
மலேசிய ஆசியான் தேசிய செயலகத்தின் உயர்மட்ட பணிக்குழுவின் சிறப்புப் பணிகள் பிரிவுச் செயலாளர் டத்தோ சுஹைமி ஜாஃபார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், AMM-இன் முக்கிய ஆவணமான கூட்டு அறிக்கையை இறுதி செய்வதில் கவனம் செலுத்தியது.
வட்டார ஒருங்கிணைப்பு, சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள், வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் நிலைப்பாடுகள் மற்றும் முடிவுகளை அந்த கூட்டு அறிக்கை எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை மட்ட விவாதங்களுக்கு முன்னதாக, செயல் திட்டம் மற்றும் விவாதத்தின் திசையை நிர்ணயிப்பதில் இந்த வரைவு கூட்டம், ஒரு முக்கியமான படியாகவும் கருதப்படுகிறது.
திமோர் லெஸ்தேவும் இந்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)