கோலாலம்பூர், 02 ஜூலை (பெர்னாமா) -- கடந்த மாதம் 20 கிலோகிராமிற்கும் அதிகமான ஷாபு வகைப் போதைப்பொருளை விநியோகித்ததாக இந்தோனேசிய தொழிலாளி ஒருவர் இன்று அம்பாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மஜிஸ்திரேட் நோர்மைசான் ரஹிம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 50 வயதுடைய முனிர் அப்துரஹ்மான் தலையசைத்தார்.
எனினும், இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி தாமான் மெலாவாத்தியில் உள்ள பேரங்காடி ஒன்றின் அருகே நண்பகல் மணி 12:38-க்கு 20,850 கிராம் ஷாபு வகை போதைப்பொருளை விநியோகித்ததாக குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39B(1)(a) மற்றும் 39B(2)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
வேதியியல் அறிக்கைக்காக காத்திருப்பதால் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை அக்டோபர் மூன்றாம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]