ஜோகூர் பாரு , 04 ஜூலை (பெர்னாமா) - ஜோகூர் பாருவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பைப் போதைப்பொருள் தயாரிக்கும் மையமாகவும் வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 'ரகசிய பொழுதுபோக்கு மையமாகவும் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
போதைப் பொருளைப் பெறும் வாடிக்கையாளர்கள் அங்கு மகிழ்ந்திருக்க ஏதுவாக அதே குடியிருப்புக் கட்டிடத்தில் மூன்று வீடுகளில் அறைகள் இருப்பதையும் தமது தரப்பு அடையாளம் கண்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் syabu, ekstasi மற்றும் ketamin உட்பட 17 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, ஒரு லட்சத்து 90,205 ரிங்கிட் மதிப்பிலான வாகனம், ரொக்கப் பணம் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ எம். குமார் கூறினார்.
"இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்படத் தொடங்கிய இக்கும்பலின் பின்னணியில் உள்நாட்டவர் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. நாங்கள் சோதனை செய்த இடத்தில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறைகளை அவர்கள் கேளிக்கை மையம் போன்று மாற்றியமைத்துள்ளனர். மேலும், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் போதைப்பொருளை விநியோகிக்கவும் அவர்கள் அந்த இடங்களைப் பயன்படுத்துகின்றனர்," என்றார் அவர்.
இச்சோதனை நடவடிக்கையின் மூலம் நான்கு உள்நாட்டு ஆடவர்கள், ஒரு உள்நாட்டு பெண், ஒரு சிங்கப்பூர் ஆடவர், இரண்டு வியட்நாமிய பெண்கள் மற்றும் ஒரு லாவோஸ் பெண் என்று ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் methamphetamine வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பதும், அவர்களில் நால்வருக்கு போதைப்பொருள் மற்றும் இதர குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39B, 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுத்துறை சட்டம் செக்ஷன் 108, 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 108 ஆகியவற்றின் கீழ் விசாரனை மேற்கொள்ளப்படுகிறது.
விசாரணைக்கு உதவ சந்தேக நபர்கள் அனைவரும் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)