அமெரிக்கா, 02 ஜூலை (பெர்னாமா) -- எலோன் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் கோடிக் கணக்கான அமெரிக்க டாலர் உதவித் தொகையை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக லட்சக் கணக்கான அமெரிக்க டாலரை செலவழித்த மஸ்க், அவரின் வரி விதிப்பு மற்றும் செலவின சட்ட மசோதாவை மீண்டும் விமர்சித்ததை அடுத்து, அவர்களுக்கு இடையிலான சர்ச்சை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் குறைந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இச்சட்ட மசோதா, ஈ.வி எனப்படும் மின்சார வாகனங்களின் முதன்மை உற்பத்தியாளரான டெஸ்லாவிற்கு இதுவரை பயனளித்து வந்த, மின்சார வாகனங்களை வாங்குவதற்கான உதவித்தொகையை நீக்கவிருக்கிறது.
தூய்மையான போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் டெஸ்லாவின் ஈடுபாடு காரணமாக, வரிச் சலுகை உட்பட பிற கொள்கைச் சலுகையாக கோடி கணக்கான அமெரிக்க டாலரை அந்நிறுவனம் பெற்று வந்தது.
பயனீட்டாளர்களைக் கவரக்கூடிய, ஈ.வி-ஐ வாங்கும் அல்லது வாடகைக்கு எடுப்பவர்களுக்கு, 7,500 அமெரிக்க டாலர் வரிச் சலுகை அளிக்கப்படுவது உட்பட சம்பந்தப்பட்ட அதிகமான திட்டங்கள் மீது டிரம்பின் நிர்வாகம் கட்டுபாட்டைக் கொண்டுள்ளது.
இப்புதியச் சட்ட மசோதாவினால், நேற்று, பங்குச் சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் வீழ்ச்சி கண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)