புத்ராஜெயா, 01 ஜூலை (பெர்னாமா) -- தேசிய எல்லைக் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் இலக்கிற்கு ஏற்ப மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம், ஏ.கே.பி.எஸ்ஸின் பங்கை மேலும் வலுவாகவும், பொருத்தமானதாகவும் மேம்படுத்த அதன் புதிய தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் செயின் உறுதியளித்துள்ளார்.
இன்று, அந்நிறுவனத்தில் தமது பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய முஹமட் சுஹைலி, அந்த உறுதிப்பாட்டை வழங்கினார்.
ஏ.கே.பி.எஸ்ஸின் நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அவாங் அலிக் ஜெமான் தமக்கு முதன்மை பொறுப்பை வழங்கியிருப்பதாக முஹமட் சுஹைலி தெரிவித்தார்.
"நான் பார்த்த குழுவில் எனக்கு தெரிந்த முகங்கள் உள்ளன. குடிநுழைவு, போலீஸ் மற்றும் பல. உடல் ரீதியாகவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதிச் செய்வதே ஏ.கே.பி.எஸ்-இன் கடமையாகும். அரசாங்கத்தால் விரிவாக்கப்பட்டது போல", என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற ஏ.கே.பி.எஸ் தலைமை இயக்குநரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், முஹமட் சுஹைலி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
முன்னதாக, காலை மணி 9.15 அளவில், ஏ.கே.பி.எஸ் அலுவலகத்திற்கு வந்தடைந்த டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹைலியை, நிர்வாக துணை தலைமை இயக்குநர் இஸ்மாயில் மொக்தாரும், செயல்பாட்டு துணை தலைமை இயக்குநர் முஹமட் ஜஸ்மி முஹமட் ஜுவாஹிர்யும் வரவேற்றனர்.
இன்று தொடங்கி 2027-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை இரண்டு ஆண்டுகளுக்கு, ஏ.கே.பி.எஸ்ஸின் தலைமை இயக்குநராக டத்தோ ஶ்ரீ முஹமட் சுஹைலி நியமிக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)