ஷா ஆலம், 01 ஜூலை (பெர்னாமா) -- கடந்த மாதம், சைபர் ஜெயாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளூர் பல்கலைக்கழக மாணவி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்திற்குத் தொடர்புடைய சந்தேக நபர், அங்கு பலமுறை தனது காதலியுடன் இரவைக் கழித்திருப்பதாக நம்பப்படுகின்றது.
கொலை சம்பவத்திற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒன்றாக வீட்டில் தங்கியிருந்த தோழியும், முக்கிய சந்தேக நபரின் காதலியுமானவர் தமது வீட்டின் நுழைவு அட்டையையும், சாவியையும் காதலனிடம் ஒப்படைத்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.
அச்சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது தவறான எண்ணம் கொண்டிருப்பதோடு, அப்பெண் தனியான வீட்டில் இருந்த சமயத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக, இந்த வழக்கு அமைந்திருப்பதாக அவர் கூறினார்.
தேர்வு காலம் முடிந்து வீடு திரும்பிய தனது காதலி கொடுத்த வீட்டின் நுழைவு அட்டையையும் சாவியையும் கொண்டு வீட்டினுள் நுழைந்த அச்சந்தேக நபர், பொருளைக் கொண்டு அப்பெண்ணின் தலையில் தாக்கி மரணம் விளைவித்ததோடு கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்.
சைபர் ஜெயாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் காலை சுமார் 10 மணிக்கு 20 வயதுடைய பெண் ஒருவர் தன் நண்பரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கொலை வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)