கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை சைபர்ஜெயாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளூர் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
20 வயதான அம்மாணவி சுயநினைவின்றி கிடந்ததாக காலை மணி 10.28 அளவில் புகார் கிடைத்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி நோர்ஹிசாம் பாஹாமான் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட அம்மாணவி அக்குடியிருப்பிலேயே இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அவர் தெரிவித்தார்.
அம்மாணவியின் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கான எந்தவொரு தடையமும் இல்லை என்றும் அவ்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவியின் உடலில் பரிசோதித்ததில், அவரின் தலையில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் சுல்தால் இட்ரிஸ் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
தலையில் தாக்கப்பட்டதால ஏற்பட்ட ஆழமான காயம் மரணத்திற்கான காரணம் என்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பில் எந்தவொரு காயங்களும் இல்லை என்றும் பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)