புத்ராஜெயா, 26 ஜூன் (பெர்னாமா) -- கோத்தா மடானி மேம்பாடு நகர்ப்புற மேம்பாட்டிற்கான ஒரு மாதிரியாகப் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், இது மேம்பாட்டாளர்களால் மட்டும் தீர்மானிக்கப்படாமல், மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டு விரிவான முறையில் திட்டமிடப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் மேம்பாட்டாளர்களின் பரிந்துரைகளை மட்டும் நம்பியிருக்காமல், அரசு ஊழியர்கள் உட்பட மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்வதை வளர்ச்சித் திட்டமிடல் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
''இந்தத் திட்டத்தை நிறுவனம் மற்றும் மேம்பாட்டாளர் மட்டுமே தீர்மானிக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் முடிவு செய்தால், நிச்சயமாக அவர்களுக்கு லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கருத்துகளும் பரிந்துரைகளும் வழங்கப்படும். லாபம் இல்லாமல் 400 கோடி ரிங்கிட் திட்டத்தை உருவாக்கும் மேம்பாட்டாளர் யாரும் இல்லை என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இது சாத்தியமே'', என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில், கோத்தா மடானி மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும் போது அன்வார் அவ்வாறு கூறினார்.
வெளிப்புற ஆலோசகர்களை நம்பியிருக்காமல், புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் மற்றும் தொடர்புடைய அரசாங்க துறைகளின் ஒத்துழைப்பு மூலம் உள்ளூர் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி கோத்தா மடானி திட்டம் முழுமையாக உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)