பெட்டாலிங் ஜெயா, 15 மே (பெர்னாமா) - வட்டார கூட்டுறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ முதன்மை அமைப்பாக ஆசியான் கூட்டுறவு அமைப்பு, ACO-வை அங்கீகரிப்பதில் அதன் உறுப்பு நாடுகள் ஒன்றுபடுமாறு வலியுறுத்தப்படுகின்றன.
இரண்டு நாட்களாக நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு ஆசியான் கூட்டுறவு கலந்துரையாடல், ACD இன் போது, செய்யப்பட்ட நான்கு தீர்மானங்கள் வழியாக அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக மலேசிய தேசிய கூட்டுறவு கழக நிறுவனம் அங்காசாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அப்துல் ஃபாத்தா அப்துல்லா தெரிவித்தார்.
வருடாந்திர பொதுக் கூட்டம், ACO துறைசார் பொதுக் கூட்டம், ஆசியான் கூட்டுறவு மன்றக் கூட்டம் மற்றும் ஆசியான் கூட்டுறவு உயர் மட்ட கலந்துரையாடல் ACHLD 2025 ஆகியவற்றின்போது அந்த தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
கூட்டுறவு சம்பந்தப்பட்ட அமைச்சின் பிரதிநிதி, பதிவாளர்கள், ஆசியான் கூட்டுறவு உச்ச அமைப்பு மற்றும் மலேசியாவில் உள்ள முதன்மையான கூட்டுறவுகளின் கருத்துகளின் அடிப்படையில் இத்தீர்மானங்கள் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
"பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரே ஆசியானின் தலைவராக இருப்பதால் அவரிடம் சமர்ப்பிப்பதற்கு நான்கு தீர்மானங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த தீர்மானங்கள் இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் KLCC இல் நடைபெறும் ASEAN உச்சநிலை மாநாட்டில் முன்வைக்கப்படும்," என்றார் அவர்
ஆசியான் கூட்டுறவுக் கழகங்களின் நிர்வாகக் குழுவாக ACO அங்கீகரிக்கப்படுவதால், ஆசியானில் உள்ள பிற பொருளாதாரத் துறைகளுக்கு இணையாக கூட்டுறவுக் கழகங்களின் நிலையை உயர்த்தும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
புதன்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற AC 2025 எனப்படும் ஆசியான் கூட்டுறவு உரையாடலுடன் கூடிய இரவு உணவு மற்றும் நிறைவு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஶ்ரீ டாக்டர் அப்துல் ஃபாத்தா அப்துல்லா அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)