புத்ராஜெயா, 13 மே (பெர்னாமா) -- அண்மையில், இரண்டு உள்துறை அமைச்சு, (கே.டி.என்) அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், (எஸ்.பி.ஆர்.எம்) அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, தாம் முழு ஆதரவு அளிப்பதாக, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
Op Outlander சோதனை நடவடிக்கையின்போது, இரண்டு கே.டி.என் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய டத்தோ ஶ்ரீ சைஃபுடின், கூடுதல் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்றும் விசாரணை செயல்முறையில் நம்பிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.
"முதலாவதாக, எஸ்.பி.ஆர்.எம் தங்களின் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். தற்போது நான் கே.டி.என் அமைச்சராக, கே.டி.என் அலுவலக அதிகாரியாக இருந்தாலும் சரி அல்லது மற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு 25 மணி நேரத்திற்கு எஸ்.பி.ஆர்.எம் நுழைந்து சோதனை நடத்தலாம். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பிற்கு ஏற்றவாறு அவர்கள் கடமையை செய்ய வேண்டும்," என்றார் அவர்.
இம்மாதம் 8-ஆம் தேதி, புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், இரண்டு கே.டி.என் அதிகாரிகளும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டதை, எஸ்.பி.ஆர்.எம் உறுதிப்படுத்தியது.
குடியுரிமை நிலையை உறுதிப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை விரைவுப்படுத்தும் செயல்முறைக்காக ஊழலில் ஈடுபட்டதாக, எஸ்.பி.ஆர்.எம்-மிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணக்கு உதவ மூன்று நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில், வெளிநாட்டினர் உட்பட குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தனிநபர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
Goldman Sachs-இன் முன்னாள் பங்காளியான அமெரிக்காவைச் சேர்ந்த டிம் லீஸ்னர் மீது நிதி நாணயச் சட்டம் மற்றும் சிவப்பு அறிவிக்கையின் கீழ் வழக்கு தொடரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
''எனவே, யார் மீதும் குற்றச்சாட்டு இருந்தால், நாங்கள் அதை எங்கள் நாட்டின் சட்டங்கள் படி மேற்கொள்வோம். எங்கள் நாடு இறையாண்மை கொண்ட நாடு. அவர் ஒரு வெளிநாட்டவர் என்பதால், நிச்சயமாக அது தொடர்புடைய வழிகளைப் பயன்படுத்துகிறோம். அதைதான் நாங்கள் முன்பு செய்தோம்,'' என்றார் அவர்.
1 எம்.டி.பி ஊழலில் டிம் லீஸ்னரின் பங்கு தொடர்பில், அவரை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, மலேசியா கோரிக்கை வைத்ததாக கடந்த மே 7-ஆம் தேதி Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)