கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- மலேசிய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காட்டு வரி ஆகஸ்ட் முதலாம் தேதி அமலுக்கு வரவுள்ளது.
இன்னும் மூன்று வாரக்கால அவகாசம் இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையுடனான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அதன் சாத்தியங்களையும் எதிர்கொள்ள அது தயாராக இருக்க வேண்டும் என்கிறார் வருமான வரி ஆலோசகர் தினேஷ் கண்ணா.
முன்னதாக 24 விழுக்காட்டு வரியை அறிவித்த அமெரிக்கா தற்போது மலேசியா உட்பட ஜப்பான், தென் கொரியா மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காட்டு வரியை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதில் உள்ள விலக்கு மற்றும் மற்றும் சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று தினேஷ் கண்ணா தெரிவித்தார்.
''உதாரணத்திற்கு, இங்கிருந்து நாம் அவர்களுக்கு 100 ரிங்கிட் விலையில் ஒரு பொருளை இறக்குமதி செய்கிறோம் என்றால், அந்த 100 ரிங்கிட்டிற்கு 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்ற அவசியமில்லை. அமெரிக்க விதிகளை நாம் புரிந்தகொள்ள வேண்டும். அங்கு பல்வேறான வர்த்தகச் சட்டங்கள் உள்ளன. பல விலக்குகள் உள்ளன. அந்த 100 ரிங்கிட் பொருள் 90 ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டு அதிலிருந்து 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, அதன் சட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கான தயார்நிலைப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். விநியோகச் சங்கிலி மறுகட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆவணங்களும் தயாராக இருக்க வேண்டும்,'' என்று அவர் விவரித்தார்.
இந்த வரி விதிப்பினால் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரியளவிலான மாற்றம் ஏற்படவிருப்பதோடு மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியிலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று தினேஷ் விவரித்தார்.
''இதனால் அணுகல் திறனிலும் மாற்றம் நிகழும். இதர வர்த்தகங்களிலும் வெவ்வேறான தாக்கங்கள் நிகழ வாய்ப்புண்டு,'' என்றார் அவர்.
எனினும், அமெரிக்காவுடனான தொடர் பேச்சுவார்த்தைகளின் வழி இந்த வரி விதிப்பில் மாற்றம் நிகழும் சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.
இதனிடையே, எந்தவொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கான வரியை உயர்த்தும் பட்சத்தில் தற்போதைய வரி விதிப்பைக் காட்டிலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]