Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

டெக்சஸ் வெள்ளத்தில் பலியானோருக்கு அஞ்சலி; கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன

10/07/2025 06:10 PM

டெக்சஸ், 10 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்கா, தென் மத்திய டெக்சசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியான 119 பேருக்கு நேற்று அஞ்சலி செலுத்தும் வகையில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

அப்பகுதியின் ஆளுநர் கிரேக் அபோட் கொடிகளை அரைக்கம்பத்தில் பறப்பதற்கு கடந்த புதன்கிழமை அனுமதி அளித்ததோடு வரும் ஜூலை 14-ஆம் தேதி திங்கட்கிழமை சூரியன் உதயம் வரை அது நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

புள்ளிவிவரங்களின் அடிப்படையில்170-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயிருப்பதால் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கிரேக் அபோட் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டிருந்தும் காணாமல் போனவர்களை இன்னும் உயிருடன் மீட்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கனமழை பெய்ததால் ஆற்றின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, டெக்சஸ், சான் ஏஞ்சலோவைப் புரட்டிப் போட்ட திடீர் வெள்ளத்தின் காட்சிகள் ஆளில்லா விமானம் மூலம் பதிவு செய்யப்பட்டது. 
 
சான் ஏஞ்சலோ போலீசாரால் வெளியிடப்பட்ட இக்காணொளியில், தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீர் மீட்புக் குழுவினர் ஆகியோர் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திலிருந்து  நீரில் மூழ்கிய வாகனங்கள், கூரைகள் மற்றும் மரங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதைக் காண முடிந்தது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]