துரின், 13 மே (பெர்னாமா) -- Leonardo நிறுவனத்தின் முதல் கடல்சார் ரோந்து விமானம் 2026-ஆம் ஆண்டின் இறுதியில் மலேசியாவிற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது விமானம் வழங்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக 2023-ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்ட, கிட்டத்தட்ட 90 கோடி ரிங்கிட் மதிப்பிலான கொள்முதலின் ஒரு பகுதியாக இந்த இரண்டு விமானங்களும் உள்ளதாக டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் கூறினார்.
அதோடு, இந்த கொள்முதல் தென் சீனக் கடல் போன்ற நீர்ப் பகுதிகளைக் கட்டுப்படுத்தவும் நாட்டிற்கு உதவும்.
இத்திட்டம் தற்போது 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக நிறைவடைந்திருக்கும் வேளையில், திட்டமிட்டபடி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒரு கடல்சார் நாடான, மலேசியா அண்மைய சொத்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், திட்டத்தின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, உள்ளீட்டைத் தவிர, இத்திட்டத்தின் வளர்ச்சியிலும் நாங்கள் திருப்தி அடைகிறோம்", என்றார் அவர்.
இத்தாலி, துரினில் உள்ள Leonardo நிறுவனத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட பின்னர், முஹமட் காலிட் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
அந்த விமான அமைப்பு பிரான்சின் துலூஸில் உருவாக்கப்பட்டது.
மலேசியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், மேற்பரப்பு எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன அமைப்புகளுடன் பொருத்தப்படும் என்றும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)