கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) - அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்த சிறப்பு விளக்கத்தைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்புகளை அறிவிப்பதை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்த பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இன்ட்ரா முஹமஎட் ஷாஹர் அப்துல்லா இதன் வழி, பொருளாதாரத் துறைகள் பொருத்தமான சரிசெய்தல் நடவடிக்கைகளுடன் முன்கூட்டியே தயாராக முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, பணவீக்க விகிதம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக பேங்க் நெகாரா மலேசியாவின் OPR எனும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, ஒரு விழுக்காடு குறைத்து, இரண்டு விழுக்காடாக அறிவிக்க வேண்டும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் பரிந்துரைத்தார்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்வதால் தற்போது பின்தள்ளப்பட்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ஆதரவாக அனைத்து முதலீட்டாளர்களும் குறைந்தது 50 விழுக்காடு உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நீண்டகால நடவடிக்கையாக விவசாயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் உணவு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் போக்கை அரசாங்கம் குறைக்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவரும் லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
அதோடு, ஏற்றுமதி ஊக்கத் தொகைகளை வழங்குதல், தொழில்துறை நிறுவனங்களுக்கு வரி ஒத்திவைப்பை அமல்படுத்துதல் மற்றும் உள்நாட்டு தேவையைத் தூண்ட உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கான பிரச்சாரம் உள்ளிட்ட பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)