புத்ராஜெயா, 29 ஏப்ரல் (பெர்னாமா) - இளைஞர்களிடையே உள்ள சமூகப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, மலேசியாவில் பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ஏனெனில், பெரும்பாலான பதின்ம வயதினர் 14 வயதிற்கு முன்பே பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தரவு காட்டுகிறது.
ஆனால், பள்ளிகளில் பாலியல் கல்வி 15 வயது மாணவர்களுக்கு மட்டுமே கற்றுத் தரப்படுவதை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ சுட்டிக்காட்டினார்.
"இது நிரப்பப்பட வேண்டிய ஒரு இடைவெளி ஆகும். கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இந்த விஷயத்தை நன்கு அறிந்துள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் மேம்பாடுகளைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
இன்று, விஸ்மா கேபிஎஸ்-இல் சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து பல்வேறு மதங்களைச் சேர்ந்த இளைஞர் தலைவர்களுடன் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தலைமையேற்றப் பின்னர் ஹன்னா இவ்வாறு கூறினார்.
சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழக்கமான அணுகுமுறைகள், இனியும் பயனுள்ளதாக இருக்காது என்றும் அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)