உலகம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் நாளையோடு நிறைவு

16/04/2024 08:18 PM

சென்னை, 16 ஏப்ரல் (பெர்னாமா) --  வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழகத்தில் அதன் பிரச்சாரங்கள் நாளை மாலை 6 மணியோடு நிறைவடையவிருப்பதாக நிறைவடையும் என்று தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

நாளை மாலை பிரச்சாரம் முடிந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்று அவ்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 

பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற சமூக ஊடக பக்கங்களிலும்  பிரச்சாரம் செய்ய முடியாது என்று, அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு தொகுதியில் இருக்கக் கூடாது. 

அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. 

வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்கள் கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். 

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)