பொது

'இன்ஸ்கேன்' மூலம் 10,000 தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்க இலக்கு

16/04/2024 07:52 PM

சைபர்ஜெயா, 16 ஏப்ரல் (பெர்னாமா) --  இன்ஸ்கேன் (INSKEN) எனப்படும் தேசிய தொழில்முனைவோர் கழக நிறுவனத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் மூலம் 10,000 தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்க, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, குஸ்கோப் இலக்கு கொண்டுள்ளது.  

சேவை துறை தொழில்முனைவோர் பயிற்சியில் அதிக பங்கேற்பு இருப்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அதன் அமைச்சர்  டத்தோ இவோன் பெனெடிக் தெரிவித்தார். 

கடந்தாண்டு மட்டும் நாடு தழுவிய அளவில் உள்ள 9,700 தொழில்முனைவோருக்கு பயிற்சி அளித்ததன் வழி இன்ஸ்கேன் தனது இலக்கை அடைந்ததாக இவோன் குறிப்பிட்டார். 

இன்ஸ்கேனின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பெரும்பாலான தொழில்முனைவோர் 75 விழுக்காட்டு விற்பனை மதிப்புடன் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

தொழில்முனைவோரின் சுயவிவரத்தைப் பார்க்கும்போதும் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும், பெரும்பாலான குறு மற்றும் சிறு தொழில்முனைவோர் சேவை தொழில்துறையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த சேவை தொழில்துறையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சுற்றுலாத் தொழில்துறையிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இவர்கள் உட்பட அனைவருக்கும் 'இன்ஸ்கென்' பயிற்சி வழங்குகிறது. எனினும், சேவை தொழில்துறையினரின் பங்கேற்பே மிக அதிகமாகும். என்றார் அவர். 

இந்த இலக்கை அடையும் பொருட்டு, நாட்டின் தொழில்முனைவோர் அமைப்பை வலுப்படுத்துவதில் இன்ஸ்கேன்  மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு குஸ்கஓ தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று எவோன் குறிப்பிட்டார். 

இன்று, சைபர்செஜாவில் இன்ஸ்கேன் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)