பொது

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக நம்பப்படுகிறது

16/04/2024 08:25 PM

கோத்தா பாரு, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- சனிக்கிழமை பின்னிரவு 1.20 மணிக்கு கே.எல்.ஐ.ஏ 1-இன் வருகை தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் நேற்று கைது செய்யப்படுவதற்கு முன்னர் நாட்டின் எல்லை வழியாக தப்பிச் செல்ல முயற்சித்ததாக நம்பப்படுகிறது.

அச்சந்தேக நபர் அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்திருக்கும் பதிவுகள், கடப்பிதழ், குறிப்பிட்ட தொகையில் ரியால் மற்றும் பாட் போன்ற வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்தது ஆகிய நடவடிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு நம்பப்படுவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் சேன் தெரிவித்தார்.

''அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் எந்த வழியைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்திருப்பார் என்பதை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். அவரின் பயணப் பதிவை ஆராயும்போது அவர் அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது,'' என்றார் அவர். 

இன்று, கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முஹமட் ஷுஹைலி அந்தச் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கான விசாவிற்கு விண்ணப்பம் செய்துள்ளாரா எனும் விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

அதே காரில், ஏப்ரல் 14-ஆம் தேதி அந்நபர் கிளந்தான் சென்றடைந்ததாகவும் அவரின் நகர்வு கண்டறியப்படாமல் இருப்பதற்காக காரின் பதிவு எண் மாற்றப்பட்டது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]