பொது

டான் ஶ்ரீ லீ லாம் தாய் சுயசரிதை; தமிழிலும் மொழியாக்கம் கண்டு வெளியீடு

15/04/2024 08:34 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- அரசியல், பொதுவாழ்வு மட்டுமின்றி மக்களைடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில், தேசிய அளவில் தனி பாதை வகுத்து தமக்கென ஒரு வரலாற்றைக் உருவாக்கிக் கொண்டவர் சமூக ஆர்வலர் டான் ஶ்ரீ லீ லாம் தாய்.

சமூக மற்றும் அரசியல் ரீதியான அவரின் அரை நூற்றாண்டுப் பயணக்கதை, ஆங்கிலம், சீனம் மற்றும் மலாய் மொழிகளில் சுயசரிதையாக வெளிவந்திருக்கும்  நிலையில் தற்போது தமிழிலும் மொழியாக்கம் கண்டு  ''மக்கள் நாயகன் லீ லாம் தாய்'' என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 

பேரா ஈப்போவைச் சேர்ந்த டான் ஶ்ரீ லீ லாம் தாய், தமது 23-வதில் சமூக ரீதியாக மக்களுக்கு தொண்டாற்றத் தொடங்கிய அவர், பின்னர் அரசியலில் ஈடுப்பட்டார். 

தேசிய ஒருமைப்பாட்டு ஆலோசனை மன்ற உறுப்பினராக இருக்கும் அவர்,  ஜசெக கட்சியின் முன்னாள் உறுப்பினராக சிலாங்கூர் புக்கிட் நனாஸ் மற்றும் செர்டாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார். 

அதோடு, தற்போது புக்கிட் பிந்தாங் நாடாளுமன்றமாக அறியப்படும் தொகுதி, முன்னர் கோலாலம்பூர் பண்டார் என்ற பெயரில் இருந்த வேளையில், லீ லாம் தாய் அதன்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 

இப்படி, அரசியல் ரீதியாக ஆற்றிய சேவைகளையும் தமது அனுபவங்களையும் நான்கு மொழிகளில் தமது சுயசரிதையாக கொடுத்திருக்கின்றார். 

தமிழில் வெளியீடு கண்டிருக்கும் தமது நூல், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமின்றி, இந்திய சமுதாயத்திற்கு தாம் வழங்கிய பங்களிப்பு குறித்தும் அதில் எழுதப்பட்டுள்ளதாக கூறினார் 

''நான்கு மொழிகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். காரணம் நான் ஒரு மலேசியர். பல்வேறு இனங்களையும் நாட்டையும் மதிக்கின்றேன். நாட்டிற்கான இந்தியர்களின் பங்களிப்பை வரவேற்கின்றேன். சமுதாயத்திற்காக இதுவரை நான் செய்துள்ளதை இதன் வழி அவர்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றேன்'', என்றாரா அவர்.

கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தன் கட்டிடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு,  இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் என்று  சுமார் 200 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். 

இவ்விழாவில் 230 நூல்கள் விற்பனையான நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் டான் ஶ்ரீ லீ லாம் தாய் இம்முயற்சியை மேற்கொண்டதாக நூல் வெளியீட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் மு. கணேசன் கூறினார். 

''மக்கள் நாயகன் லீ லாம் தாய்'' எனும் நூல் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு தன்முனைப்பு புத்தகமாக அமைவதோடு, அரசியல் மீதான பார்வைக்கு புது வெளிச்சத்தைக் கொடுக்கும் என்றும் கணேசன் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)