பொது

பிள்ளைகளுக்குப் புத்தாடை வாங்கச் சென்ற பெற்றோர் விபத்தில் பலி

08/04/2024 07:31 PM

சிரம்பான், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்களின் நான்கு பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கித் தர வேண்டும் என்ற பெற்றோரின் கனவு கவலையில் முடிந்தது.

இன்று காலை சிரம்பான் நோக்கிச் சென்ற அவர்களின் வாகனம் ஜாலான் புக்கிட் மந்தினில் விபத்துக்குள்ளானதில் தாய் தந்தையர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தமது மகளான நூர் அசினா அஸ்ரின் மற்றும் அவரது மருமகன் அப்துல் ஹலிம் மாட் ராணி  இருவரும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வகையில் பொருட்கள் வாங்குவதற்காக, தங்களின் நான்கு பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டுமென்று பெரானாங்கில் உள்ள தங்களின் வீட்டிலிருந்து சிரம்பானில் உள்ள குடும்பத்தினரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக 56 வயதுடைய ஹஸ்மாதி அஹ்மட் தெரிவித்தார்.

"நேற்று நான் மகளைத் தொடர்பு கொண்டபோது பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்க வேண்டுமென்று என்னிடம் கூறியிருந்தார்.  மூன்று முதல் 12 வயதுக்குட்பட்ட எனது நான்கு பேரப் பிள்ளைகளும் இன்னும் சிறியவர்களாகவே உள்ளனர். விபத்து குறித்து இன்று காலையில் தகவல் பெற்றேன்,"என்று துவாங்கு ஜஃபார் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறினார். 

தனது மருமகனின் கிராமமான ரெம்பாவில் இம்முறை நோன்புப் பெருநாளைக் கொண்டாட தனது மகளும் மருமகனும் திட்டமிட்டிருந்ததாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, இன்று காலை 10.25 மணியளவில் புக்கிட் மந்தின் சாலையிலிருந்து சிரம்பான் நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 34 வயது ஆண் மற்றும் 32 வயது பெண் ஆகிய இருவரும் பலியானதாக போலீசார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502