பொது

வேண்டுமென்றே காலணியில் மத முத்திரை; உரிய நடவடிக்கை தேவை

08/04/2024 06:19 PM

கோத்தா பாரு, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- வெர்ன்ஸ் குழும நிறுவனத்தின் தயாரிப்பிலான காலணிகளின் அடிப்பகுதியில் அல்லாஹ் என்ற எழுத்து வடிவிலான முத்திரை வேண்டுமென்றே பொறிக்கப்பட்டிருந்தால் இந்நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தை கடுமையாக கருதுவதாகவும் இதன் தொடர்பில் தொடர் விசாரணை மேற்கொள்ளும் PDRM-க்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, ஜாக்கிம் தலைமை இயக்குநர் டத்தோ ஹக்கிமா முஹமட் யூசோஃப் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்திருப்பதால், அதனை அமலாக்கத் தரப்பினரிடமே விட்டுவிடுவதாக அவர் கூறினார்.

வெர்ன்ஸ் குழும நிறுவன தோற்றுநரும் நிர்வாக இயக்குநருமான டத்தோ ஶ்ரீ இங் சுவான் ஹோவை இன்று சந்தித்து விளக்கம் பெற்றதோடு, இவ்வாறான விவகாரங்கள் மீண்டும் எழாமல் இருக்க அந்நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து விசாரிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சபா, சரவாக் உட்பட நாடு முழுமையிலும் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிளைகளில் இருந்து அந்த காலணி மீட்டுக் கொள்ளப்பட்டதோடு, அதனை விற்பதற்கும் அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502