பொது

தொழில்துறை நீதிமன்றத் தலைவர்களாக இரண்டு பெண்கள் நியமனம்

29/03/2024 08:20 PM

கோலாலம்பூர், 29 மார்ச் (பெர்னாமா) -- இரண்டு தொழில்துறை நீதிமன்றத் தலைவர்களாக தொழிலாளர் சட்ட துறையில் பரந்த அனுபவம் கொண்ட இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களின் நியமனம் இன்று தொடங்கி அமலுக்கு வருகிறது.

இதன்வழி, 22 தொழில்துறை நீதிமன்றத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் எண்மர் பெண்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நீதிமன்ற வரலாற்றில், இம்முறைதான் மிக அதிகமான பெண்கள் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

59 வயதுடைய சௌ சியூ லின் மற்றும் 52 வயதுடைய பிரவின் கோர் ஜெஸ்சி ஆகிய இருவரே புதிதாக நியமிக்கப்பட்ட அந்த இரண்டு தலைவர்களாவர்.

அவர்களின் பதவிக் காலம் இன்று தொடங்கி நான்கு ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்று ஸ்டீவன் சின் குறிப்பிட்டார்.

''இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், மகளிர் தின மாதத்தில் மேலும் இரண்டு பெண்கள் தொழில்துறை நீதிமன்றத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் மலேசிய தொழில்துறை நீதிமன்றத்தின் புதிய தலைவர்களை நியமிக்கும் நிகழ்ச்சியில் ஸ்டீவன் சிம் அவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்ற செயல்முறைகள் ஆக்கப்பூர்வமாக நடைபெறுவதை உறுதிசெய்ய பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)