பொது

பயணப்பை; நிறுவன இயக்குநரிடம் நாளை விசாரணை

29/03/2024 07:39 PM

ஷா ஆலம், 29 மார்ச் (பெர்னாமா) -- 500,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான ரொக்கம் இருந்த பயணப்பையின் உரிமையாளர் என்று அறியப்படும் ஒரு நிறுவனத்தின் இயக்குநரிடம் நாளை விசாரணை மேற்கொள்ளப்படலாம்.

அண்மையில் டாமான்சராவில் உள்ள பேரங்காடி வாகன நிறுத்துமிடத்தில் அந்த பயணப்பை கண்டெடுக்கப்பட்டது.

முன்னதாக பல்வேறு காரணங்களுக்காக விசாரணைக்கு வரத் தவறியிருப்பதால், அந்த ஆடவர் நாளை அவரின் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று தமது தரப்பு பெரிதும் எதிர்பார்ப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

"தற்போது வரை, 30ஆம் தேதி அதாவது நாளை சனிக்கிழமை வருவதாக உறுதியளித்தார். அதனால் நாளை அவர் வந்தால், அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து, அது நிறுவனத்தின் பணம் என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தைக் கண்டறிவோம்," என்று அவர் கூறினார்.

வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, பயணப்பை உரிமையாளர் அவர்தான் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னர், சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களில் போலீசார் திருப்தி அடைய வேண்டும் என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை, ஷா ஆலமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஹுசேன் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)