பொது

கொலை வழக்கு விசாரணை; 13 மாணவர்களின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டது

29/03/2024 07:15 PM

லஹாட் டத்து, 29 மார்ச் (பெர்னாமா) -- தொழிற்கல்வி கல்லூரி மாணவனின் கொலை வழக்கு விசாரணைக்கு உதவ, 13 மாணவர்களின் தடுப்புக் காவல் உத்தரவை வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான விண்ணப்பத்திற்கு லஹாட் டத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-வின் கீழ், 16 லிருந்து 19 வயதுடைய அந்த அனைத்து மாணவர்களுக்கும் எதிரான விசாரணைத் தொடரப்படுவதற்கு ஏதுவாக மாஜிஸ்திரேட் நூர் அஸ்ராஃப் சோல்ஹானி அந்தத் தடுப்புக் காவல் நீட்டிப்பிற்கு அனுமதி அளித்தார்.

லஹாட் டத்து தொழிற்கல்வி கல்லூரியின் மாணவர் தங்கும் விடுதி அறையில், 17 வயதுடைய முஹமட் நஸ்மி அய்சாட் முஹமட் நருல் அஸ்வானின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 22-ஆம் தேதி அம்மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முஹமட் நஸ்மியின் உடலில் காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் காணப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இரண்டு மாணவர்களின் 50 மற்றும் 35 ரிங்கிட் காணாமல் போனதைத் தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் ரொஹன் ஷா அஹ்மட் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதனால், சம்பந்தப்பட்ட மாணவர் அப்பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி தாக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாகவும் ஏசிபி டாக்டர் ரொஹன் முன்னதாக கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)