பொது

கையூட்டு பெற்றதாக கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி தனித்து செயல்பட்டிருக்க மாட்டார் - அசாம் பாகி

29/03/2024 06:50 PM

புத்ராஜெயா, 29 மார்ச் (பெர்னாமா) -- அண்மையில் கோலாலம்பூரில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவரைப் பாதுகாப்பதற்காக கையூட்டு பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி, தனித்து செயல்பட்டிருக்கமாட்டார்.

மேலும், இவ்விவகாரத்தில் உயர் பதவி கொண்ட போலீஸ் அதிகாரியின் தலையீடு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாகி தெரிவித்தார்.

தற்போது அந்த அதிகாரி கையூட்டாகப் பெற்ற மொத்த தொகை மற்றும் கையூட்டு வழங்கியவரின் விவரம் குறித்த விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

கோலாலம்பூரில், சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க கையூட்டு பெற்றதாக நம்பப்படும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை, எஸ்.பி.ஆர்.எம் கைது செய்திருந்தது.

கோலாலம்பூர் முழுவதிலும், சூதாட்டம், ஒழுக்கமின்மை மற்றும் குண்டர் கும்பல் உட்பட சட்டவிரோத நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க 40 வயதான அந்த ஆடவர், 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை கையூட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதில், அவருக்குச் சொந்தமான சில கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் எஸ்.பி.ஆர்.எம் 12 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் கண்டெடுத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)