உலகம்

பால்டிமோர் பாலம் இடிந்த சம்பவம்; கொள்கலன் கப்பலில் 20 இந்திய பணியாளர்கள்

29/03/2024 06:43 PM

புது டெல்லி, 29 மார்ச் (பெர்னாமா) -- பால்டிமோர் (BALTIMORE) நகரில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் விபத்துக்குள்ளான கொள்கலன் கப்பலின் பணியாளர்கள் நலமுடன் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் பணியாற்றிய 21 பணியாளர்களில் 20 பேர் இந்தியர்கள் என்று அவ்வமைச்சின் பேச்சாளர், ரண்டிர் ஜய்ஸ்வால் அறிவித்தார்.

பணியாளர்களில் ஒருவருக்கு மிதமான காயங்களே ஏற்பட்டுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பில், கப்பல் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, பால்டிமோர் நகரில் கொள்கலன் கப்பல் ஒன்று மின்சாரக் கோளாறினால் கட்டுப்பாட்டை இழந்து, பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை மோதி விபத்துக்குள்ளானது.

மற்றொரு நிலவரத்தில், புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதான விவகாரம் குறித்து அமெரிக்கா வெளியுறவுத் துறை பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சட்டம் தொடர்பான செயல்முறைகள் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதே போன்ற கருத்து கொண்ட எவருக்கும், குறிப்பாக சக ஜனநாயக நாடுகளுக்கும், இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, கடந்த மார்ச் 21-ஆம் தேதி, புது டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆட்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் தரப்பினரால் கைது செய்யப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)