பொது

கோலாலம்பூர் போலீஸ் தலைவராக ருஸ்டி முஹமட் நியமிக்கப்பட்டார்

29/03/2024 06:02 PM

கோலாலம்பூர், 29 மார்ச் (பெர்னாமா) -- இன்று முதல், கோலாலம்பூர் போலீஸ் தலைவராக, டத்தோ ருஸ்டி முஹமட் இசா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் முதலாம் தேதி, பணி ஓய்வு பெறவிருக்கும் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட்டுக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கும் அவர், முன்னதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே-இல் புலனாய்வு மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பொறுப்பேற்றிருந்தார்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் முன்னிலையில், கோலாலம்பூர் போலீஸ் தலைவர் பணி ஒப்படைப்பு மற்றும் பணியேற்பு விழா இன்று நடைபெற்றது.

பணி ஓய்வுபெறவிருக்கும் அலாவுடின், போலீஸ் துறையில் 38 ஆண்டுகாலம் சேவையாற்றி உள்ளார்.

''போலீஸ் ஆணையர் டத்தோ அலாவுடின் பின் அப்துல் மஜிட்டின் சிறந்த சேவைக்காகவும், குறிப்பாக கோலாலம்பூர் படையில் அவரின் அர்ப்பணிப்புக்காக படையின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.

இதனிடையே, கோலாலம்பூர் போலீஸ் தலைவராக பதவியேற்கும் ருஸ்டி, அதன் சவால்கள் மற்றும் பொறுப்புகளை தமது பரந்த அனுபவத்தின் வழி கையாளும் திறன் கொண்டவர் என்று தாம் நம்புவதாகவும் ரசாருடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)