உலகம்

ஜொஹனெஸ்பர்க்கில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், 45 பேர் பலி

29/03/2024 06:00 PM

லிம்போபோ, 29 மார்ச் (பெர்னாமா) -- தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் மாகாணத்தில் உள்ள லிம்போபோ எனும் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. 

அப்பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த 45 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லிம்போபோவின் மொகொபனே மற்றும் மார்கேன் இடையே உள்ள மலைப்பாதையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்ததாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. 

ஈஸ்டர் விழாவிற்காக போட்ஸ்வானா எனும் இடத்திலிருந்து லிம்போபோவில் உள்ள மொரியா நகருக்கு சென்று கொண்டிருந்த வழியில் இப்பேருந்து விபத்துக்குள்ளானது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர்  தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அதோடு, வார இறுதியில் வரும் ஈஸ்டர் விழாவிற்காக, அதிகமான மக்கள் சாலையில் பயணிப்பதால், பொது மக்கள் பாதுகாப்புடனும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விபத்துக்கான காரணத்தை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)