பொது

போலீஸ் சட்டம் செக்‌ஷன் 21-இன் திருத்தம் குறித்து சர்ச்சையாக்குவதில் பலன் இல்லை

29/03/2024 06:04 PM

கோலாலம்பூர், 29 மார்ச் (பெர்னாமா) -- 1967ஆம் ஆண்டு போலீஸ் சட்டம் செக்‌ஷன் 21, மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அதன் திருத்தம் குறித்து சர்ச்சையாக்குவதில் பலன் இல்லை.

அதன் தொடர்பில், எந்தவொரு தரப்பிற்கும் அதிருப்தி ஏதும் இருந்தால், அதை நாடாளுமன்ற அளவில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

''அதிருப்தி இருந்தால் நாடாளுமன்றத்தில் விவாதியுங்கள். இங்கு அல்ல. நாங்கள் கொள்கைகளை உருவாக்க முடியாது. அதைச் செய்வது அரசாங்கம், நாடாளுமன்றத்தில்,'' என்றார் அவர்.

கடந்த வாரத்தில், மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட போலீஸ் சட்டத் திருத்தத்தை மேலவை நிறுத்த வேண்டும் என்று இதற்கு முன்னர் பொது சமூக அமைப்பு, சி.எஸ்.ஓ வலியுறுத்தியது.

அச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், சி.எஸ்.ஓ போன்ற சம்பந்தப்பட்ட தரப்பினரை உட்படுத்தாமல் முடிவெடுக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய தேவைக்கு ஏற்ப, அச்சட்டத் திருத்தம் அவசியம் என்று ரசாருடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)