பொது

இன மத நெருக்கடியை உள்ளடக்கிய விவகாரங்களை நிறுத்திக் கொள்ள வலியுறுத்து

29/03/2024 05:50 PM

கோலாலம்பூர், 29 மார்ச் (பெர்னாமா) -- காலுறையில் அல்லா என்ற வார்த்தை பொறிக்கப்பட்டது உட்பட இன மற்றும் மத நெருக்கடியை உள்ளடக்கிய விவகாரங்களை நிறுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

அவ்விவகாரத்தைத் தொடர்வதால், சில தரப்பினர் சுயமாகவே சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

''இதற்கு முன்னர் ஜேஎஸ்ஜே இயக்குநர் கூறியதுபோல இந்த வழக்கு முடிந்துவிட்டது. காலுறையில் அல்லா என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டாம். பிடிஆர்எம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு வழங்குங்கள். அதிருப்தி கொண்டு, கேகே மார்ட்டை எரிப்பதோ அல்லது மொலொடொவ் வெடிமருந்தை பயன்படுத்துவதோ வேண்டாம். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்களுக்கு அந்த உரிமை உள்ளதாக நினைத்து நடவடிக்கை எடுக்க வேண்டாம். மலேசியாவிற்கு சட்டங்கள் உள்ளன. அச்சட்டங்களைப் பின்பற்றுங்கள்,'' என்றார் அவர்.

பேராக், பீடோரில் உள்ள கேகே மார்ட் கடை மீது, கடந்த செவ்வாய்க்கிழமை ‘மொலொடோவ் கொக்டேயில்’ அல்லது பெட்ரோலினால் செய்யப்பட்ட வெடிமருந்து வீசப்பட்டது குறித்து விளக்கமளிக்கையில் ரசாருடின் ஹுசேன் அவ்வாறு குறிப்பிட்டார்.

பண்டார் சன்வே கேகே மார்ட்டில் அல்லா என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதன் தொடர்பில், இதுவரை கேகே சூப்பர் மார்ட் & சூப்பர்ஸ்டோர் நிறுவனம் மற்றும் விநியோகிப்பு நிறுவனமான சின் ஜியான் சாங் உட்பட எழுவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)