பொது

சபாவில் இன்று காலை தொடங்கியது மேக விதைப்பு நடவடிக்கை

28/03/2024 05:35 PM

கோத்தா கினபாலு, 28 மார்ச் (பெர்னாமா) -- சபாவில் மழை பொழிய வைப்பதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கியது.

அதற்கான பணிகளை மேற்கொள்ளும் அரச மலேசிய விமானப்படையின் விமானம், இன்று காலை சுமார் 9 மணிக்கு லபுவான் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நூர் தெரிவித்தார். 

மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் லபுவானில் உள்ள TUDM-மிற்கு சொந்தமான C-130 Hercules விமானம் மற்றும் அதன் பணியாளர்களின் புகைப்படங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

TUDM-ஐ தவிர்த்து, சபா முதலமைச்சர் துறையின் மாநில விவகாரங்கள் மற்றும் ஆய்வு அலுவலகம், தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா, மலேசியா வானிலை ஆய்வு மையம், லபுவான் நீர் விநியோக துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெப்பநிலை மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கி வரும் சனிக்கிழமை வரை மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மெட்மலேசியா பரிந்துரைத்திருந்ததாக நேற்று ஹஜிஜி தெரிவித்திருந்தார்.

தகுந்த மேக வளிமண்டல கணிப்பின் அடிப்படையில், மழையைப் பொழிய வைப்பதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்நடவடிக்கைக்கான செலவை நட்மா ஏற்றுக் கொள்வதோடு, மெட் மலேசியா அதற்கான ஆள்பலம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)