உலகம்

புது டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் கைது 

22/03/2024 06:44 PM

புதுடெல்லி, 22 மார்ச் (பெர்னாமா) -- புது டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆட்மி  கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், நேற்றிரவு அமலாக்கத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கட்சியும் அமைச்சர்களும் மதுபான விநியோகிப்பாளர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான கையூட்டுத் தொகையைப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

55 வயதான கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க புது டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய அமலாக்க நிறுவனம் பணமோசடி தொடர்பாக அவரை கைது செய்தது.

புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பல மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகே அவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசாங்கம், கெஜ்ரிவாலை ஒன்பது முறை விசாரணைக்கு அழைத்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் வர இயலவில்லை என்று சம்மன்களைத் தவிர்த்து வந்தார்.

14 மொத்த மதுபான விநியோகிப்பாளர்கள், ஓராண்டிற்கு 338 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியதாகவும், அவர்கள் கெஜ்ரிவால் கட்சிக்கும் அமைச்சர்களுக்கும் 100 கோடி ரூபாய் கையூட்டு வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது வீட்டின் முன்புறத்தில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)