பொது

சட்டவிரோதக் குடியேறிகளைத் திரும்ப அனுப்பும் திட்டத்தின் மூலம் 94 லட்சம் ரிங்கிட் அபராதம் வசூல்

22/03/2024 06:10 PM

கோத்தா கினபாலு, 22 மார்ச் (பெர்னாமா) -- குடிநுழைவுத் துறையின் சட்டவிரோதக் குடியேறிகளைத் திரும்ப அனுப்பும் திட்டத்தின் வழியாக, அரசாங்கம் இதுவரை 94 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையை வசூலித்துள்ளது.

இவ்வாண்டு மார்ச் முதலாம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் அத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சட்ட விரோதக் குடியேறிகள், அத்திட்டத்தில் பதிவு செய்ய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பதாக கூறிய  சைஃபுடின் நசுத்தியோன், செல்லுபடியாகும் அட்டை அல்லது பெர்மிட் இன்றி மலேசியாவிற்குள் நுழைந்தது அல்லது தங்கியிருப்பது, மலேசியாவில் கூடுதல் நாட்களாக தங்கியிருப்பது அல்லது அனுமதி அட்டையின் நிபந்தனைகளை மீறுவதே அவை ஆகும் என்று குறிப்பிட்டார்.

சட்டவிரோதக் குடியேறிகளைத் திரும்ப அனுப்பும் திட்டத்தின் கீழ், மொத்தம் 11 ஆயிரத்து 943 பேர் பதிவுச் செய்திருக்கும் வேளையில், மார்ச் முதலாம் தேதொ தொடங்கி நேற்று வரையில் 13 ஆயிரத்து 760 பேர் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]