சிறப்புச் செய்தி

ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  நீர் விநியோகத்  தடைக்குத் தீர்வு

22/03/2024 06:01 PM

பாடாங் ரெங்காஸ், 22 மார்ச் (பெர்னாமா) -- கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீர் விநியோகமின்றி பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி வந்த பாடாங் ரெங்காஸ் தொகுதியைச் சேர்ந்த ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பேராக் மாநில அரசாங்கத்தின் துணையோடும் மாநில  தமிழ்ப்பள்ளி தீர்வுக் குழு இயக்கத்தின் ஏற்பாட்டிலும் புதிய நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

சுமார் 22,500 ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நீர்க்குழாயின் மூலமாக , 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அப்பள்ளிக்கு இனி தங்கு தடையின்றி நீர் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார். 

கடந்த 1954ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 15 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் உள்ளனர்.

தொடக்கத்தில் இப்பள்ளியைச் சுற்றியிருந்த 1,200 ஏக்கர் நிலத்தை இந்தியர் ஒருவரே வைத்திருந்தார்.

பின்னாளில், அந்நிலத்தை சீன நிறுவனம் வாங்கியவுடன், இனி பள்ளிக்கு நீர் விநியோகிக்க முடியாது என்றும் சொந்தமாக குழாய் பொருத்தி நீரைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

ஏனெனில், இத்தோட்டத்தில் இருந்த ஒரே ஒரு மாணவர் மட்டுமே அப்பள்ளியில் கல்வி பயிலும் வேளையில், மற்றவர்கள் வெளியில் இருந்து இப்பள்ளிக்கு வருவதால், மாணவர்களின் தேவைக்கு தோட்ட நிர்வாகம் செலவிட முடியாது என்றும் அது கூறியது.

இவ்விவகாரம் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை அளவிலே இருந்து வந்த நிலையில் இப்போதுதான் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சிவநேசன் கூறினார்.

"அன்றைய சூழ்நிலையில் அதாவது, சுதந்திரத்திற்கு முன்னதாக, லெபோ ஆர்டினென்ஸ் கீழ் தமிழ்ப்பள்ளி, அதற்குரிய வசதிகள், ஆலயம் உட்பட மக்களுக்குத் தேவையான வசதிகளை தோட்டம் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் இருந்தது. ஆனால் இப்போது பல தோட்டங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல தேவைகள் நிறைவேற்றப்படுவது மிகவும் சிரமமாக உள்ளது. இன்று இந்த தோட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமை நாளை மற்ற தோட்டங்களிலும் ஏற்படலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற விவகாரங்கள் பள்ளிகளில் எழுந்தால் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி மேலாளர் வாரியமும் இணைந்து முதற்கட்ட தீர்வைக் காண முயல வேண்டும்.

அவ்வாறு முயன்றும் முடியாத பட்சத்தில் தமது உதவியை நாடினால் அங்குள்ள நிலைப்பாட்டிற்கு ஏற்ப தம்மால் உதவி செய்ய முடியும் என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

"இன்று தலைமையாசிரியரின் உரையைக் கேட்கையில் இங்குள்ள பலர் நல்ல நிலையில் உள்ளதாகக் கூறினார். அத்தகையோரைக் கண்டறிந்து பள்ளியின் தேவைகள் குறித்து அவர்களுக்கு தெரிவித்தால், நிச்சயம் தங்களால் இயன்ற உதவியை அவர்களும் செய்வார்கள். இதனால் பள்ளி அரசாங்கத்தின் உதவிக்காக காத்திராமல் தானாக மேம்படும்," என்றார் அவர். 

இன்று காலை அப்பள்ளிக்கு வருகை அளித்த அவர், பள்ளி வளாகத்தில்  புதியதாக பொருத்தப்பட்ட நீர் குழாயை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)