விளையாட்டு

ஹாக்கி விளையாட்டில் மிளிர்ந்து வரும் இளம் நட்சத்திரம் தீரேஷ்

22/03/2024 12:53 PM

கோலாலம்பூர், 22 மார்ச் (பெர்னாமா) -- 2024 மலேசிய ஹாக்கி லீக் போட்டியில் பங்கேற்ற கே.எல் சிட்டி அணியைச் சேர்ந்த சிலர் நேரடியாக சுக்மாவிற்குத் தகுதிப் பெற்ற வேளையில், இன்னும் சிலர் 18 வயதுக்கு உட்பட்ட எம்.எஸ்.எஸ்.எம் போட்டிக்குத் தேர்வாகினர்.

இவ்விரண்டு போட்டிகளிலும் தேர்வுப் பெற்றிருக்கும், 15 வயது தீரேஷ் குணசீலன் ஹாக்கி விளையாட்டில் மிளிர்ந்து வரும் இளம் நட்சத்திரமாகி உள்ளார்.

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டுப் பள்ளி மாணவரான தீரேஷ், ஹாக்கி விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் திறமையாலும், தமது பள்ளியின் ஹாக்கி அணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது.

பின்னர், ஹாக்கி விளையாட்டில் படிபடியாகத் தம்மைச் செதுக்கிக் கொண்ட அவர், கே.எல் சிட்டி அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

தமது உயரம் காரணமாகப் பெரும்பாலான போட்டிகளில் தற்காப்பு ஆட்டக்காரராக மட்டுமே விளையாடி வந்தாலும், அனைத்து நிலைகளில் இருந்தும் விளையாடக் கூடிய திறனை இவர் கொண்டுள்ளார் என்பதும் மறுப்பதற்கில்லை.

" 2019-ஆம் ஆண்டில் ஆரம்பப் பள்ளியில் பயிலும் போது ஹாக்கி குழுவிற்குத் தலைமை ஏற்றேன். ஐந்தாம் ஆண்டு படிக்கும் காலக்கட்டத்திலேயே கோலாலம்பூரைப் பிரதிநிதித்து எம்.எஸ்.எஸ்.எம்-இல் விளையாடினேன். அப்போது எனது குழு தேசிய அளவிலான போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தது," என்று தீரேஷ் பகிர்ந்து கொண்டார்.

கோலாலம்பூர், டாமான்சாராவில் வசிக்கும் தீரேஷ், வீட்டின் நான்கு பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளை ஆவார்.

விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ள தீரேஷிற்குக் குடும்பமே முழு பக்க பலமாகி உள்ளது.

ஒரு விளையாட்டாளரான தமது மகனுக்குத் தேவையான சத்துள்ள உணவுகளைக் கொடுப்பதிலும், விளையாட்டின் போது ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் தாம் அதிக கவனம் செலுத்துவதாகத் தீரேஷின் தந்தை, குணசீலன் இராஜு கூறினார்.

" எது அவர்களுக்கு ஏற்ற உணவோ அல்லது சத்துணவோ அதை எல்லாம் செய்து கொடுப்பது நம்முடைய வேலையாக இருக்க வேண்டும். சில பேர் சாப்பிடுவதில் தேர்வு செய்வார்கள். அதாவது இது பிடிக்காது அது பிடிக்காது என்று. ஆனால், நான் தீரேஷிடம் அதை எல்லாம் கற்று கொடுத்திருக்கிறேன். குறிப்பாக உடல் எலும்புகளுக்கு, மூளைக்கு இதுப்போன்ற உணவுகள் தேவை என்று. அவர்களுக்கு நல்லவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் நமது கடமை," குணசீலன் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த மலேசிய ஹாக்கி லீக் போட்டியில் கே.எல் சிட்டி அணி சிறந்த எட்டு அணிகளுள் ஒன்றாகத் தேர்வுப் பெற்றிருப்பதற்குத் தீரேஷ்சின் பங்களிப்பும் முக்கிய காரணமாகி உள்ளது.


-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]