சிறப்புச் செய்தி

மனவளர்ச்சி குறைபாடுடைய பிள்ளைகளை கையாள்வதற்கான வழிவகைகள் ஏராளம்; விழிப்புணர்வே குறைவு

21/03/2024 07:48 PM

கோலாலம்பூர், 21 மார்ச் (பெர்னாமா) -- 'டவுன் சிண்ட்ரம்' (down syndrome) அல்லது மனவளர்ச்சி குறைபாடு என்பது ஒருவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறாகும்.

உலகளவில், ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 100 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த மனவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 3000-இல் இருந்து 5000 குழந்தைகள் இப்பிரச்சனையை எதிர்நோக்குவதாகத் தரவுகள் கூறுகின்றன.

தற்போதைய நவீன உலகில், இந்த குழந்தைகளுக்கான சிகிச்சையும் அவர்களைக் கையாள்வதற்கான வழிவகைகளும் ஏராளமாக இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது.

மனவளர்ச்சி குறைபாடுடையவர்களும் சாதாரண ஆட்களைப் போலவே ஆசைகளையும் கனவுகளையும் கொண்டுள்ளனர்.

அவர்களும் ஒரு கௌரமான வேலை மற்றும் குடும்பத்தைக் கொண்டிருக்கவும் விரும்புவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

எனினும், சமூகத்தில் அவர்களைப் பார்க்கும் விதமும் அவர்களுக்கான வாய்ப்புகளும் குறைவது வருத்தமளிப்பதாக கூறுகின்றார் கோலாலம்பூர் மருத்துவமனையின் உளவியல் நிபுணர் டாக்டர் அஷ்வின் அழகா.

''மனவளர்ச்சி குறைபாடு என்பது ஒரு மரபணு நோயாகும். இவர்கள் நிறைவான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடிந்தாலும் பாகுபாடு காரணமாக சம உரிமை அல்லது வாய்ப்பைப் பெறுவதில்லை. இதனால், அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார் அவர்.

இந்தப் பிரச்சனை ஆழமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றும் இது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

''மனவளர்ச்சி குறைபாடு தொடர்பிலான தவறான கண்ணோட்டம், மனவுளைச்சலை ஏற்படுத்துதல், அவமானப்படுத்துதல் போன்றவை அவர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற கலங்கங்கள் மற்றும் பாதுகாப்பின்மையை நிவர்த்திச் செய்வதற்கு பன்முகத்தன்மை அணுகுமுறைகள் அவசியம். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு தேவை,'' என்றார் அவர்.

இதனிடையே, மனவளர்ச்சி குறைபாடு கொண்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் மனக்கவலைக்கு ஆளாவதுடன் அவர்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வு குறைவாகக் காணப்படுவதாக சிலர் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தனர்.

அப்பிள்ளைகளைக் கையாள்வதற்கு வழிகள் பல இருப்பதால் அவற்றை ஆராய்ந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அவர்கள் கூறினர்.

''விழிப்புணர்வு குறைவாகத்தான் உள்ளது. அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் உள்ளது அனைவருக்கும் தெரியுமா என்பது தெரியவில்லை. தெரிந்தாலும், அங்கு அனுப்புவதற்கு சிலர் தயக்கம் காட்டலாம். ஆனால், தயக்கம் காட்டாமல் அவர்களை அங்கு அனுப்பினால்தான் அவர்களுக்கு முறையான வழிகாட்டல் கிடைக்கும்,'' என்று விஜயலட்சுமி தம்புசாமி தெரிவித்தர்.

''இந்த விழிப்புணர்வு குறைவாகத்தான் உள்ளது. இந்நிலையில் ஏற்றுக்கொள்ள பெற்றோர்களால் இயலவில்லை. எனவே, அவர்கள் அதற்குக் கவனம் செலுத்துவதில்லை,'' என்று ஜெகதீஸ்வரன் தேவராஜன் கூறினார். 

இப்படி இருக்க, இதற்கான மாற்றுக் கருத்தும் பெறப்பட்டது.

''மனவளர்ச்சி குறைபாடு இருந்தால் தனிகவனம் செலுத்தி பார்க்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மற்ற பிள்ளைகளைப் போலவே அவர்களையும் வளர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பார்த்து சிறப்பு கவனம் செலுத்தும்போது அவர்களுக்கே வேறுபாடாக இருப்பது போல உணர்வார்கள்,'' என்று ஈஸ்வரி செல்வநாதன் குறிப்பிட்டார். 

எனவே, இந்தக் குழந்தைகளை நன்முறையில் வளர்ப்பது சவால் நிறைந்ததாகவே இருந்தாலும் காலத்திற்கு ஏற்ற வசதிகள் மற்றும் வளர்ச்சிகளின் உதவியுடன் பெற்றொர்களும் சமூகமும் அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.

End the Stereotype எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டிற்கான மனவளர்ச்சி குறைபாடு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]