சிறப்புச் செய்தி

அந்நிய தொழிலாளர் விசா விண்ணப்பம்; கால அவகாசத்தை நீட்டிப்பீர் - பிரிமாஸ்

19/03/2024 07:45 PM

கோலாலம்பூர், 19 மார்ச் (பெர்னாமா) -- மார்ச் 31ஆம் தேதிக்குள் அந்நிய தொழிலாளர்களுக்கான விசாவை விண்ணபிக்கத் தவறினால் அவர்களுக்கான கோட்டா ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வர்த்தக சங்கங்கள் முன் வைத்திருந்தன. 

அந்த விண்ணப்பத்திற்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் பட்சத்தில், அரசாங்கம் மீண்டும் இதனை பரிசீலித்து கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஜெயபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு வர்த்தகர்கள் தங்களது வணிகத்தை வழிநடத்தி வருகின்றனர்.

இதற்கு மத்தியில், இது போன்ற அறிவிப்புகளால் தங்களின் வர்த்தகத்தில் முழு கவனம் செலுத்தவதில் சிக்கல் ஏற்படுவதாக, சுரேஷ் ஜெயபாலன் கூறினார்.

ஏற்கனவே, அந்நிய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்நிலையில், விண்ணப்ப செயல்முறைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டால், அந்நிய தொழிலாளர்களைத் தருவித்தப் பின்னரும் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

''இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றுக் கோரவில்லை. கால அவகாசத்தைதான் நீட்டிக்கும் படி கேட்கின்றோம். அரசாங்கம் இதற்கு உடனடியாக தீர்வுக் காண வேண்டும்,'' என்றார் அவார்.

எனவே, தங்களின்  நிலமையையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தாம் நம்புவதாக சுரேஷ் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502