பொது

புறநகர் மேம்பாடு என்பது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல - சாஹிட்

17/03/2024 06:42 PM

கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) -- புறநகர் மற்றும் கிராம மேம்பாடு என்பது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல.

மாறாக, மாநில அரசாங்கங்களும் அதே கடப்பாட்டைக் கொண்டு அப்பகுதிகளில் வறிய நிலையில் உள்ள மக்களின் விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாநிலங்களுக்கு இடையே இடைவெளி உள்ளது.

ஏனெனில், சில மாநில அரசாங்கங்கள் தங்கள் புறநகர்களை மேம்படுத்துவதில் அதிக அக்கறைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

"மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் முக்கியமல்ல. மாறாக, கல்வி உட்பட சமரீதியான இதர மேம்பாடுகளும் அவசியம். இந்த அம்சத்திற்கு (மேம்பாடு) முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்கள் (மத்திய அளவில்) மற்றும் மாநில அரசாங்க துறைகளுடன் ஒருங்கிணைப்பு தேவை. மத்திய அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். தங்களுக்கென அதிக வருமானம் பெறும்போது புறநகர் பகுதிகள் கொண்ட மாநிலங்கள் வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.

அண்மையில், பெர்னாமாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சாஹிட் அவ்வாறு கூறினார்.

நாடு முழுவதிலும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் 87 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் சுமார் 17.3 விழுக்காட்டினர் வறிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏழ்மை மற்றும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு உதவ அரசாங்கம் தொடர்ந்து உறுதி கொண்டுள்ளதாகவும் சாஹிட் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502