பொது

பிரதமரின் நேரடி உதவியால் சஞ்ஜீவன் வாழ்வில் புது விடியல்

16/03/2024 07:31 PM

தம்புன், 16 மார்ச் (பெர்னாமா) -- மூன்று வயது முதல் சுவாசிக்கும் பிரச்சினையை எதிர்நோக்கி வந்த 11 வயதுடைய சஞ்ஜீவன் குணசேகரன் என்ற மாணவனின் வாழ்வில் புதிய விடியல் பிறந்துள்ளது.

பேராக் , சங்காட் கிண்டிங் தோட்டத்  தமிழ்ப்பள்ளியில் பயின்று வந்த அம்மாணவர், சுவாசப் பிரச்சினையால் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

அதற்கு தீர்வு காணும் பொருட்டு, அவருக்கு  OXYGEN CONCENTRATOR எனப்படும், நவீன சுவாச செறிவுக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வயது இருக்கும் போது தமது மகனுக்கு அடிக்கடி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதுடன், இறுதியில் அது சுவாசிப்பதற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாக சஞ்ஜீவனின் தாயார் நந்தினி கணேசன் வேதனையுடன் கூறினார்.  

கணவர் தஞ்சோங் ரம்புத்தான் மனநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் வேளையில், குறைந்த வருமானத்துடன் மகனின் மருத்துவ செலவுகளை ஈடுகட்டி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நாங்களும் மகனை அழைத்து கொண்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கடந்த எட்டு மாதங்களாக சென்று வருகிறோம். தற்போது மகனின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் பூரண நலமடைவார் என்று வேண்டுகிறோம்," என அவரின் தாயார் நந்தினி கணேசன் தெரிவித்தார்.

தமது ஒரே மகனின் நிலைமையைக் கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வீட்டிலேயே அவருக்கு போதித்து வந்த நிலையில், தற்போது மகன் ஐந்தாம் ஆண்டில் மீண்டும் கல்வி பயில்வது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாக நந்தினி கூறினார்.

முதலாம் ஆண்டில் பதிவு செய்திருந்தாலும் உடல்நிலைக் காரணமாக சஞ்ஜீவனால் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அது தமக்கு மிக வருத்தமாக இருந்தாலும், இனி மற்ற மாணவர்களைப் போன்று சஞ்ஜீவனும் கல்வியில் சிறந்து விளங்குவார் என்று சங்காட் கிண்டிங் தோட்டத்  தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் மகாராணி சுப்பிரமணியம் நம்பிக்கைத் தெரிவித்தார். 

இவ்விவகாரத்தை பிரதமரின் சிறப்பதிகாரி ஆர்.சுரேஸ்குமாரின் பார்வைக்கு கொண்டு சென்றதால் அம்மாணவர் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அம்மாணவரின் நிலையை அறிந்த பிரதமர் அக்கருவியை வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்ததாக சுரேஸ்குமார் கூறினார்.

"எனக்கு நேற்றுதான் இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றது. பிரதமர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இது குறித்து நான் அவரிடம் தொலைப்பேசியில் தெரிவித்தேன். உடனே அவர் அதை வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார், " என்று சுரேஸ்குமார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502