சிறப்புச் செய்தி

கெடா & ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் இன்று பள்ளி தவணை ஆரம்பம்

10/03/2024 08:39 PM

சுங்கை துக்காங், 10 மார்ச் (பெர்னாமா) -- நீண்ட விடுமுறைக்குப் பின்னர், புதியப் பள்ளி தவணை ஆரம்பமான வேளையில், ஏ குழு மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் இன்றைய காலை பொழுதைத் தொடங்கி உள்ளனர்.

ஓய்ந்து கிடந்த வார நாட்களும் வகுப்பறைகளும், மீண்டும் மாணவர்களால் களைக்கட்டியதோடு அவர்களின் வருகையால் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர்.

ஆடி ஓடித் திருந்த வீட்டு வாண்டுகள் எல்லாம் இன்று பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டுகளில் காலடி எடுத்து வைத்துள்ளன.

அந்தத் தருணங்களை கெடா மற்றும் ஜோகூரில் உள்ள ஓரிரு தமிழ்ப்பள்ளிகள் பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்து கொண்டன.

நீண்ட விடுமுறைக்குப் பின்னர், மீண்டும் பள்ளித் தவணைக் தொடங்கினாலே மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான்.

குறிப்பாக, முதலாம் ஆண்டு மாணவர்களின் புதிய வரவு, அவர்களின் அழுகை சத்தம், பெற்றோர்களின் வருகை என்று ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் முதல் நாள் ஆரவாரமாக இருக்கும்.

அதில், கெடா, சுங்கை பட்டாணி, சுங்கை தூக்காங் தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய வகை சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வருகையால் குதூகலமானது.

இவ்வாண்டு 24 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவுச் செய்துள்ளதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்திமா கண்ணன் கூறினார்.

'' 2024 பள்ளித் தவணையில் மொத்தம் 200 மாணவர்கள் பயில்கிறார்கள். முதலாம் ஆண்டில் 24 மாணவர்கள் மட்டுமே பதிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்றுக் குறைவே,'' என்று அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் கட்டளைக்கு இணங்க பள்ளியில் முதல் வாரம் முழுவதும் கற்றல் கற்பித்தல்கள் ஏதுமின்றி, மனமகிழ் நடவடிக்கைகளே மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியின் முதல் நாள் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் தொடங்கி இருக்கிறது.

இதனிடையே, அம்மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொரு தமிழ்ப்பள்ளியான தேசிய வகை சங்லூன் பள்ளியில் முதலாம் ஆண்டிற்காகப் பதிவுச் செய்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, அதன் இணைப்பாட துணை தலைமையாசிரியர், கார்த்திகேசன் சதாசிவம் கூறினார்.

''இவ்வாரம் முழுவதும் மனமகிழ் நடவடிக்கைகள்தான் நடைபெறும். இப்பள்ளியின் ஆண்டு ஒன்றில் 12 மாணவர்களும் பாலர் பள்ளியில் 10 மாணவர்களும் காலடி பதித்தனர். எனவே, இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு அதிகரித்துள்ளது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு எட்டாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு 12-ஆம் இப்பள்ளியில் அதிகரித்திருக்கிறது.

அதோடு, சங்லூன் தமிழ்ப்பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையும் தற்போது 57-இல் இருந்து 66-ஆக உயர்ந்துள்ளதாக கார்த்திகேசன் தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் அவ்வப்போது உறுதிச் செய்து வருகின்றன.

மற்றொரு நிலவரத்தில், ஜோகூர் மாநிலத்தின் ஜோகூர் பாருவில் உள்ள தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இன்று பள்ளி தவணை சீராகத் தொடங்கி உள்ளது.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை உருவ பொம்மைகள் வரவேற்று உற்சாகப்படுத்தியது.

அங்கு முதலாம் ஆண்டில் 85 மாணவர்களும் பாலர் பள்ளியில் 75 மாணவர்களும் பதிவுச் செய்துள்ளனர்.

காலை மாலை என்று இரண்டு வேளைகளாகக் கற்றல் நடைபெறும் இப்பள்ளியில், இவ்வாண்டு ஆண்டு 1 முதல் ஆறு வரையில் 412 மாணவர்கள் பதிவுச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]