சிறப்புச் செய்தி

கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசம்; 569,261 ரிங்கிட் நிதி வசூல்

14/02/2024 08:15 PM

ஈப்போ, 14 பிப்ரவரி (பெர்னாமா) -- பல்வேறு சரச்சைகளில் இருந்து மீண்டு வந்த ஈப்போ இந்து தேவஸ்தானம், இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தியது.

அந்த வகையில், பேராக் மாநிலத்தில் உள்ள கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில், ஐந்து லட்சத்து 69 ஆயிரத்து 261 ரிங்கிட் நிதி வசூலானதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தகவல் வெளியிட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளின் வாயிலாக ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 400 ரிங்கிட் நிதி வசூலிக்கப்பட்டது.

மேலும், முடி காணிக்கை, பாலபிஷேகம் , தேங்காய் அர்ச்சனை போன்றவற்றின் வழி அதிகமான நிதி வசூலாகி இருப்பதையும் தேவஸ்தான தலைவர் ஆர். சீத்தாராமன் தெரிவித்தார்.

பேராக் மாநில அரசாங்க செயலகத்தில், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனுடன் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பிற்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அத்தகவல்ளைப் பகிர்ந்து கொண்டார். 

மற்றொரு நிலவரத்தில், ஈப்போ கல்லுமலை தைப்பூச விழாவில் தொண்டூழிய சேவை ஆற்றியவர்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட், பூசிங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் மற்றும் ஈப்போ பெரிய மருத்துவமனை ஊழியர் சமூக நல அமைப்புக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியை சிவநேசன் இன்று வழங்கினார்.

அந்நிகழ்விற்குப் பின்னர் பேசிய சிவநேசன், ஈப்போ இந்து தேவஸ்தானம் தொடர்ந்து எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் முறையே் நிர்வாகத்தை வழி நடத்தும்படியும் அறிவுறுத்தினார்.


-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]