பொது

பொது சேவை ஊழியர்களின் ஊதிய சீரமைப்பு முறை; அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தாக்கல் செய்யப்படும்

14/02/2024 05:48 PM

கோலாலம்பூர், 14 பிப்ரவரி (பெர்னாமா) -- பொது சேவை ஊழியர்களின் ஊதிய சீரமைப்பு முறை தொடர்பான முடிவு, 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்போது அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஊதிய முறையை சீரமைக்கும் பரிந்துரை இறுதி செய்யப்பட்டு, இவ்வாண்டு இரண்டாவது காலாண்டின் தொடக்கத்தில், ஒப்புதல் பெறுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது சேவை துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

பொது சேவை ஊதிய முறை தொடர்பான பரிந்துரைகளை தொடர்ந்து அனுப்புவதற்கு அனைத்து நிலையிலான ஊழியர்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் முதலாம் தேதிக்குள், semakansaraan.jpa.gov.my எனும் அகப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகளையும் கருத்துகளையும் அவர்கள் பதிவிடலாம்.

நேற்று நடைபெற்ற பொது சேவை ஊதிய முறை தொடர்பான ஆய்வு செயற்குழுக் கூட்டத்திற்கு பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.

அரசாங்க ஊழியர்களின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான முயற்சிகள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)