பொது

மைபிபிபி கட்சியின் பொதுப் பேரவை ; மெக்லின் டிக்ரூஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி வெற்றி

19/03/2023 06:02 PM

கோலாலம்பூர், 19 மார்ச் (பெர்னாமா) -- கடந்த ஐந்து ஆண்டுகளாக தலைமைத்தும் அமைப்பதில் சவாலை எதிர்நோக்கி வந்த மைபிபிபி கட்சியின் பொதுப் பேரவை இன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவின் ஒப்புதலுக்கு இணங்க இந்தப் பேரவை நடத்தப்பட்ட நிலையில் டத்தோ ஶ்ரீ மெக்லின் டிக்ரூஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி வெற்றிப் பெற்றார்.

அதோடு, கட்சியின் புதிய உச்சமன்ற உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர், டான் ஶ்ரீ கேவியஸ் மைபிபிபி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து, சுமார் ஐந்து ஆண்டு காலமாக தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி பிரச்சினைகளையும் சவால்களையும் சந்தித்து வந்தது.

இந்நிலையில், 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் செயல்பட்டுவந்த உச்சமன்ற குழுவிற்கே புதிய தலைமைத்துவத்தை தேர்தெடுக்கும் அதிகாரத்தை ROS வழங்கியதாக மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ மெக்லின் டிக்ரூஸ் கூறினார்.

இருந்தபோதிலும், கட்சியை மீண்டும் தமது வசமாக்க, கேவியஸ் தமது தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் டத்தோ மோகன் கந்தசாமிக்கு உள்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கியதை அடுத்து, பொது பேரவையையும் நடத்துவதற்கும் தலைமைத்துவ தேர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மெக்லின் டிக்ரூஸ் பெர்னாமா செய்திகளிடம் தெளிவுப்படுத்தினார்.

உள்துறை அமைச்சிடமிருந்து கடிதம் பெற்றவுடன், கேவியஸ்சிற்கு தங்களது தரப்பு அழைப்பு விடுத்ததாக மோகன் கந்தசாமி தெரிவித்தார்.

இருப்பினும், அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் செயல்படுவது தங்கள் தரப்பிற்கு ஆச்சிரியமாக இருப்பதாகவும் மோகன் குறிப்பிட்டார்.

''அறிக்கையை வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் என்று பல வழிகளில் அனுப்பிவிட்டோம். ஆனால், பதில் கிடைக்கவில்லை. போட்டியிட வாய்ப்பிருந்தும் அவர் வரவில்லை,'' என்றார் அவர்.

இன்று காலை கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் நடைபெற்ற பொது பேரவைக்குப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பேரவையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டு, கட்சியின் தலைமைத்துவத்தை தேர்வு செய்தனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)