அரசியல்

சாஹிட் நியமனம்; அரசியல் ஈடுபாடு கிடையாது - அஹ்மட் மஸ்லான் விளக்கம்

04/12/2022 04:51 PM

கோலாலம்பூர், 04 டிசம்பர் (பெர்னாமா) -- அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடியைத் துணைப் பிரதமராக நியமினம் செய்ததில் அரசியல் ஈடுபாடு எதுவும் கிடையாது.

மாறாக, கட்சி நிலைப்பாட்டிற்கு ஏற்ப அவரின் தரநிலை அடிப்படையில் அந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், அம்னோ மற்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்நடவடிக்கை தக்க நேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்று அம்னோவின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

''விமர்சனம் பெறாத ஓர் அமைச்சரவை இதுவரையில் இருந்ததில்லை. இதை நாங்கள் நிறைய முறைப் பார்த்துவிட்டோம். ஒரு விஷயம் நூறு விழுக்காடு பூரணமாக இருந்ததில்லை. கண்டிப்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தலைவரை விடுத்து வேறொரு நபருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருந்தால் அந்த நிலைப்பாட்டு சற்று சவாலாக இருந்திருக்கும். குறிப்பாக முதல் சவால் அம்னோவிலும் இரண்டாவது சவால் ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலும் நிச்சயம் எதிர்நோக்கி இருக்கக்கூடும்,'' என்று அவர் கூறினார்.

நேற்றிரவு, பகாங், கோல ரொம்பினிலுள்ள பி.பி.ஆர்.டி டேசா வாவாசானில் நடைபெற்ற ஒருமைப்பாட்டு அரசாங்கம் குறித்த விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)