பொது

கடந்தாண்டில் குற்றச்செயல் குறியீடு 19.3 விழுக்காடு குறைந்துள்ளது

29/11/2022 05:45 PM

கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா) -- 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், கடந்தாண்டில் குற்றச்செயல் குறியீடு 19.3 விழுக்காடு அதாவது 52,974 சம்பவங்களாகக் குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் குற்றச்செயல் சம்பவங்களின் எண்ணிக்கை 65,623ஆக பதிவு செய்யப்பட்டதாக மலேசிய புள்ளிவிவரத்துறை அறிக்கை காட்டுகிறது.

அதில், கடந்தாண்டில் வன்முறை குற்றங்கள் 13.4 விழுக்காடு குறைந்து 11,495 சம்பவங்களாகவும் சொத்து தொடர்பான குற்றங்கள் 20.8 விழுக்காடு குறைந்து 41,479ஆகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவ்வப்போது புகாரளிக்கப்படும் குற்றச்செயல் சம்பவங்களை அக்குறியீடு காட்டுகின்றது.

அதில் கொலை, கலவரம், கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் ஆகியவை அடங்கும்.

''குற்றச்செயல்களின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, சமூக நடவடிக்கைகளுக்கும், மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்து பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டதும் காரணமாகும். அதோடு, அமலாக்கத்த தரப்பினரின் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும், குற்றச்செயல் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதும் குற்றச் செயல்கள் குறைந்ததற்கான காரணங்கள்,'' என்று அவ்வறிக்கைக் காட்டுகிறது.

இதனிடையே, 2021ஆம் ஆண்டில் அரச மலேசிய போலீஸ் படைக்கு கிடைத்த வர்த்தக குற்றச்செயல்களின் எண்ணிக்கை 15.3 விழுக்காடு அதிகரித்து 31,490 சம்பவங்களாக பதிவாகி உள்ளது.

இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டில் 27,323 சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)