பொது

கோழி, கோழி முட்டை விநியோகிப்பாளர் மற்றும் வியாபாரிகளூக்கு அபராதம்

29/11/2022 04:57 PM

கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா)  -- கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தொடங்கி நேற்று வரையில் கோழி, கோழி முட்டை விநியோகிப்பாளர், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளை உட்படுத்தி 2,205 பேருக்கு, 534,200 ரிங்கிட் மதிப்பிலான அபராதத்தை உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அக்காலக்கட்டத்தில், உதவித் தொகை வழங்கப்பட்டு விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மீதான விலை உயர்வைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட 2,205 கண்காணிப்பு நடவடிக்கைகளில் அந்த அபராதங்கள் வெளியிடப்பட்டதாக அதன் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முஹ்மட் யூசோப் 
தெரிவித்தார்.

உச்சவரம்பு விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்றதற்காக 153, கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் இளஞ்சிவப்பு நிறத்திலான விலையை வைக்காததற்காக 1,980, மற்றும் விலைப் பட்டியலை வைக்காததற்காக 72 அபராதங்கள் வெளியிடப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

கோழி, கோழி முட்டை விநியோகிப்பாளர்கள், 13 பேர், 54 மொத்த வியாபாரிகள் மற்றும் 2,138 சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், 336,634 ரிங்கிட் மதிப்பிலான பொருடகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அமைச்சின் உத்தரவு அமலாக்க மையத்தை 03-8882 6088/6245 எண்கள், Ez-ADU செயலி, அல்லது e-aduan.kpdnhep.gov.my எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இது தொடர்பிலான புகார்களை அளிக்குமாறு அவர் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)