சிறப்புச் செய்தி

இரவில் காலம் தாழ்த்தி உண்ணும் உணவே பல நோய்களுக்கு வித்திடுகிறது

25/09/2022 08:35 PM

கோலாலம்பூர், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- பரபரப்பான வாழ்க்கை சூழலில் உணவு உண்பதற்கான நேரத்தில் கூட தாமதம் ஏற்படுகின்றது.

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவை நேரம் கடந்து உட்கொள்வதால் இரவு உணவு உண்பதற்கான நேரமும் தாமதம் ஆகிறது.

இரவு நேரங்களில் காலம் தாழ்த்தி உண்ணும் உணவே, உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்கச் செய்து செரிமான கோளாறுகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாவதாக ஷா ஆலம் மாரா தொழில்நுட்ப பல்கழைகத்தின் விரிவுரையாளர் முனைவர் ரசீதா வாணி சிவமாணிக்கம் தெரிவித்தார்.

இரவு உணவு அவசியம் என்பதற்காக பெரும்பாலோர் நேரம் பாராமல் உணவை உட்கொள்கின்றனர்.

இரவில் தாமதமாக உண்ணும் உணவு உடலுக்கு சக்தியை கொடுத்தாலும் அது கொழுப்பாக மாறி நாளடைவில் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ரசீதா வாணி விளக்குகின்றார்.

''கொழுப்பு உடலில் பல பகுதிகளில் அடைக்கும் பொழுது செரிமான கோளாறு ஏற்படுகின்றது. உடலில் உள்ள கொழுப்பை அகற்றுவது எளிதான விஷயமல்ல. அதற்கு நிறைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.

நகர்புறங்களில் பலர் வேலை முடிந்து தாமதமாகவே இரவு நேரங்களி வீடு திரும்புவதால் பின்னிரவு நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

அதோடு, பெற்றோர் வருகின்ற வரை உணவுக்கு காத்திருக்கும் பிள்ளைகளும் அடங்குவர்.

இதனால், இரவில் நேரம் கடந்து உணவு உண்ணும் பழக்கம் சிறு வயது முதலே ஏற்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, இரவில் நேரம் தாழ்த்தி உணவு உட்கொள்வதால் அதிகமானோர் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாகுகின்றனர் என்றார் ரசீதா வாணி.

''2019ஆம் ஆண்டு 50.1 விழுக்காடு மலேசியர்கள் உடல் பருமனுக்கு ஆளாகியுள்ளனர். இருவரில் ஒருவருக்கு நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை எதிர்நோக்கியிருக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இரவு வேளையில் அதிகம் உண்பதால் உடல் பருமன் பிரச்னை அதிகம் ஏற்படுகின்றது,'' என்றார் ரசீதா.

மலேசியாவில் மூன்று பேரில் ஒருவருக்கு, இரவில் காலம் தாழ்த்தி உணவு உட்கொள்ளும் பழக்கம் இருப்பதாக அவர் தெரிவுத்தார்.

இதனால், இருதய நோய்களும் ஏற்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக கூறிய அவர், அதன் விளைவாக அதிக ஆபத்துகள் நிறைந்த நோய்களும் ஏற்படும் என்று எச்சரித்தார்.

''பின்னிரவு நேரத்தில் உணவு உண்பது உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது. சில காலங்கள் கழித்தப் பின்னர், அதன் பாதிப்பு பெருமளவில் இருக்கும். இருதய நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படும்,'' என்றார் ரசீதா.

உடல் ஆரோக்கியத்தில் உணவு பழக்க வழக்க முறைகளும் அவசியமானது.

மாலை 6.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இரவு உணவு உண்பதற்கான சரியான நேரம்.

ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொண்டு முறையான சுகாதாரத்தை பின்பற்றுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும் என்று ரசீதா வாணி அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)