சிறப்புச் செய்தி

உடல் உறுப்பு தானம்; விழிப்புணர்வு வரவேற்கத்தக்கதாக உள்ளது

19/08/2022 08:40 PM

கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஒருவர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்பு செயலிழந்து வாழ முடியாத சூழ்நிலையில், வேறொருவரின் உறுப்பைப் பொருத்தி அவருக்கு புதிய வாழ்க்கையை அளிக்க வழிவகுப்பது, உடல் உறுப்பு தானம்.

ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் வழி, குறைந்தது எண்மரைக் காப்பற்ற முடியும்.

இவ்வாறு முகமறியா சிலரைக் காப்பாற்ற உதவும் இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு, இந்தியர்கள் மத்தியில் வரவேற்கத்தக்கதாகவே இருந்தாலும், அது நீடிக்க வேண்டும் என்கிறார் கோலாலம்பூர் மருத்துவமனையின் உடல் உறுப்பு சேகரிப்புப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் அரவிந்த் காந்திமணி.

1997 தொடங்கி 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, இறந்த பிறகு உறுப்பு தானம் செய்வதாக உறுதியளித்துள்ள 517,758 மலேசியர்களில் 21 விழுக்காட்டினர் அதாவது 109,043 பேர் இந்தியர்கள் என்று அதன் உறுதிமொழி புள்ளிவிவரம் காட்டுகிறது.

அதே காலக்கட்டத்தில், இறந்த பிறகு உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்த மொத்தம் 779 பேரில் 205 பேர் அதாவது 26.32 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.

இது இந்தியர்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இருப்பதைக் காட்டுவதாக தெரிவித்த டாக்டர் ரமேஷ் அவ்வாறு தானம் செய்தப் பின்னர் அதைக் குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

''உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்னெவென்றால், நீங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவதாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதாகும். உறுதிமொழி எடுத்துக் கொண்டப் பின்னர் உங்களிடம் ஒரு (ஆதார) அட்டை வழங்கப்படும். நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், இறந்தப் பின்னர் உங்கள் குடும்பம்தான் அந்த முடிவை எடுப்பார்கள். எனவே, சிறந்த வழி என்னவென்றால் உறுதிமொழி எடுத்துக் கொண்டதும் உங்கள் குடும்பத்திடம் நீங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவதை தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில், நேரம் வரும்போது அவர்களும் அதற்கான செயல்முறையை மேற்கொள்வார்கள்,'' என்கிறார் அவர்.

உடல் உறுப்பு தானம் செய்த ஒருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதற்கான ஆதார அட்டையை எப்போதும் உடன் வைத்திருப்பதும் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில், உடல் உறுப்பு தானம் செய்வதில் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்.

''தற்போது நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால், முதலில் குடும்பத்தினர் என்ன செய்யலாம் என்றால், அங்குள்ள தாதி அல்லது மருத்துவரிடம் நீங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பியதைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் எங்களை அழைப்பார்கள். அதன் பின்னர் நாங்கள் அதற்கான செயல்முறைகளை மேற்கொள்வோம்,'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில், ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி செய்திருக்காவிட்டாலும், வாழ்வின் இறுதி தருணங்களில் அவ்வாறு செய்ய முன்வந்தால் அதற்கான சில வழிமுறைகள் இருப்பது குறித்து டாக்டர் ரமேஷ் விவரித்தார்.

''ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தால் உடல் உறுப்பை எடுக்க முடியும். இறந்தப் பின்னர் உடல் உறுப்புகளை எடுப்பது கடினம். ஆனால், இறந்தப் பின்னர் அவர்களின் திசுக்களை எடுக்க முடியும். ஒருவர் இறந்து 12 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்கப்பட்டால், அவர்களின் திசுக்களை எடுக்க முடியும். அதேவேளையில், ஒருவர் வீட்டிலேயே இறந்தால், தடயவியல் நிபுணரின் உதவியுடன் 12 மணி நேரத்திற்குள் அவர்களின் சில உடல் உறுப்புகளை எடுக்கலாம்,'' என்று அவர் கூறினார்.

இறுதயம். நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும், கண், எலும்பு, தோள், இதயத்தின் வால்வு ஆகிய திசுக்களையும் ஒருவர் தானம் செய்யலாம்.

மலேசியாவைப் பொருத்தவரை தற்போது அதிகம் சிறுநீரக தானமே தேவைப்படுகிறது.

''மலேசியாவில் தற்போது குறைந்தது 20,000 சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டில் குறைந்தது 20 பேர் சிறுநீரக தானம் செய்துள்ளனர். அதன்வழி 40 பேரைக் காப்பாற்ற முடிந்தது,'' என்று டாக்டர் ரமேஷ் குறிப்பிட்டார்.

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இயலாத ஒருவருக்கு உறுப்புகளைத் தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம்.

இந்த வரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதன் வழி, ஒருவருக்கு உதவ முடிவதோடு ஓர் உயிரையும் காப்பாற்ற முடியும் என்கிறார் டாக்டர் ரமேஷ்.

உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விவரங்களை www.dermaorgan.gov.my என்ற அகப்பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)