BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 

சோம்பல் நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு மூன்றாவது இடமா?

18/08/2022 08:27 PM

பிரிக்ஃபீல்ட்ஸ், 18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உலகின் சோம்பல் தனமிக்க நாடுகள் பட்டியலில் இந்தோனேசியா, சவுதி அரேபியாவிற்கு அடுத்த நிலையில் மலேசியா இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

STANFORD பல்கலைகழகம் உலகமும் முழுவதிலும் உள்ள 111 நாடுகளிலிருந்து, 7 லட்சத்து 17 ஆயிரத்து 527 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இவ்விவரம் பெறப்பட்டுள்ளது.

உணவுப் பழக்க வழக்கம், வேலை, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கடந்து மலேசிய மக்கள் நாள்தோறும் குறைந்த அளவிலேயே நடந்து செல்வதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலைப் பரபரப்பில் உடற்பயிற்சி செய்வதற்கே போதுமான நேரமில்லை என்று பெரும்பாலான மலேசியர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில், குறைந்தபட்சம் நடைப்பயிற்சி கூட மேற்கொள்ளாவிடில் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகி, முடிவில் அது பல்வகை உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஈராயிரத்தாம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியர்களிடையே காணப்படும் உடல் பருமன் எண்ணிக்கை, தொற்றா நோய்களின் குறியீடு ஆகியவை இத்தகவலை நிதர்சனமாக்கியுள்ளது.

அதிலும் புறநகர் பகுதிகளைக் காட்டிலும் நகர்புற மக்களே பரபரப்பு வாழ்க்கைச் சூழலிலும், துரித உணவு முறையிலும் மூழ்கியுள்ளதாக பெர்னாமா செய்திகளிடம் சிலர் தெரிவித்தனர்.

''தற்போதைய தொழில்நுட்ப வசதிக்கேற்ப பெரும்பாலும் பலர் ஓரிடத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதை விரும்புவதில்லை. மாறாக, இருந்த இடத்திலே இருந்துக் கொண்டு தங்களுக்குத் தேவையான அனைத்து பொருடகளையும் இணையம் மூலமாக வாங்கிக் கொள்கின்றனர். கொவிட் 19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் இந்த பழக்கம் இருந்தது நியாயமானது. ஆனால் அதுவே இப்போதும் அதே போன்ற பழக்கத்தைப் பின்பற்றுவது மேலும் நம்மை சோம்பலாக்கும், '' என்று இந்திராணி பாலகிருஷ்ணனும் ஆர்த்தி சுகுமாரானும் தெரிவித்தனர்.

உணவுப் பழக்கம் மட்டுமின்றி பணி இட சூழலும் மலேசியர்களை சோம்பலுக்கு இட்டுச் செல்வதாக பொறியியல் மாணவர் கிஷன் குமரேசன் தெரிவித்தார்.

''இளைஞர்கள் உற்சாகத்துடன் நடக்க பழகிக் கொள்ளுங்கள். எதுவுமே தங்களைத் தேடி வரும் என்று வீணே காத்திருக்க வேண்டாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளும். பழங்களும் காய்கறிகளுமே மூல உணவாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்,'' என்று கிஷன் குமரேசனும் மீனாட்சி பன்னீர் செல்வனும் கூறினர். 

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக ஆரோக்கிய  வாழ்க்கை முறைக்கான உணவுப் பழக்க வழக்கத்தையும் மலேசியர்கள் நன்கு அறிந்திருப்பது அவசியமாகும்.

குறிப்பாக,போதுமான அளவு உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதே விவேகமாகும்.

இதனிடையே, உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூடுமானவரை நாளொன்றுக்கு ஐயாயிரம் அடி வரை நடைப்பயிற்சி செய்யலாம்.

அவ்வாறு செய்வதன் மூலமாக சோம்பல் தனத்திலிருந்து மலேசியர்கள் நெட்டு முறித்து பிணியற்ற ஆரோக்கிய வாழ்க்கை  வாழலாம் என்றும் அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)